கோவை: 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டிருந்த தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படம் சிறந்த ஆவண குறும்படமாகவும், ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டுக் கூத்து பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதினை வென்றது.
இதில் சிறந்த ஆவண குறும்படமாகத் தேர்வான தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படம் நம் தமிழ்நாட்டின் முதுமலையில் வாழ்ந்து வரும் பழங்குடியின தம்பதியைப் பற்றியதாக்கும். பழங்குடி தம்பதியான பொம்மன் - பொள்ளி தம்பதி தாயை பிரிந்த 2 குட்டி யானைகளைப் பராமரித்து வருகின்றனர். அவர்களது தினசரி வாழ்வு, யானை உடனான அவர்களது பந்தம் பற்றியும், முதுமலை தெப்பக்காடு பகுதியின் இயற்கை எழில் என அத்தனையையும் கேமிரா வழி அள்ளிச் சென்று உலகறியச் செய்திருக்கிறார் உதகையைச் சேர்ந்த கார்த்திகி கோன்சால்வ்ஸ்.
கார்த்திகி கோன்சால்வ்ஸ் தான் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்தின் இயக்குநர் ஆவார். பழங்குடி தம்பதி தாயை பிரிந்த யானைக் குட்டிகளைப் பராமரிப்பது குறித்து அறிந்த கார்த்திகி கோன்சால்வ்ஸ் அதை படமாக்குவதற்குத் தேவையான அனுமதிகளைப் பெற்று பழங்குடியின தம்பதியினருடன் பயணித்து அவர்களது அன்றாட பணி, யானைகளை அவர்கள் கவனித்துக் கொள்ளும் விதம், யானைகளுக்கான பராமரிப்பு பணிகள் போன்றவைகளை படமாக்கியுள்ளார்.
இவை அனைத்தும் ஓரிரு நாட்களில் நடக்கவில்லை. தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்தை எடுப்பதற்காக கார்த்திகி கோன்சால்வ்ஸ் 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளார். 5 ஆண்டுகளாகப் படம்பிடிக்கப்பட்ட இந்த படத்தின் எடிட் செய்யப்படாத பதிப்பு 450 மணி நேரம் ஓடக்கூடியதாக இருந்துள்ளது. இதிலிருந்தே தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்தை உருவாக்குவதற்கு இவர்கள் எவ்வளவு மெனக்கெட்டிருப்பார்கள் என்று அறிந்து கொள்ளலாம்.
உலகில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் அத்தனை திரைப்படங்களுக்கும் ஆஸ்கர் விருது என்பது மிகப்பெரிய கனவாக இருந்து வருகிறது. இந்த விருது பெறப் பிரமாண்டத்தை விட யதார்த்தமான கதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அந்தத் திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஓடிடி-யில் வெளியான தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கர் பட்டியலில் சிறந்த ஆவண குறும்படமாக இடம் பெற்று இறுதிச்சுற்றுக்குச் சென்ற பின் இப்படம் குறித்து அனைவரும் தேடத்துவங்கினர். தற்போது இந்த படம் சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருதினை வென்று உலகமுழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களுக்குப் பொம்மன் - பொள்ளி தம்பதி குறித்து அறிய வைத்துள்ளது.
முதுமலைப் புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில் 28 யானைகள் உள்ளன. இதில் ரகு, அம்மு என்ற இரு யானைக் குட்டிகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2016ஆம் ஆண்டு ஓசூர் பகுதியில் குட்டியாக மீட்கப்பட்ட ரகு மற்றும் 2019ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் வனத்துறையினரால் மீட்கப்பட்ட அம்மு என்ற தாயைப் பிரிந்த இந்த இரண்டு குட்டி யானைகளும் மீட்கப்பட்டு முதுமலையில் பொம்மன் - பொள்ளியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தாங்கள் யானை குட்டிகளைப் பராமரித்து வருவதைக் குறித்து படமாக்கப்பட்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கர் விருதினை வென்றது குறித்து ஈடிவி பாரத் இடம் யானைகளைப் பராமரிக்கும் பெள்ளி கூறுகையில், ”இந்த படப்பிடிப்பு நடக்கும் பொழுது தாயைப் பிரிந்த யானைகளுடன் தான் இருப்பதும், அவைகளுக்காகத் தான் செய்யும் பராமரிப்புகள் என்னென்ன என்பது பற்றி மட்டும் தன்னிடம் கேட்டறிந்தனர். யானை குட்டிகளுடன் வனப்பகுதிக்குள் சென்று வருவது, ஆற்றில் யானைகளைக் குளிப்பாட்டுவது, யானைகள் தங்களுடன் ஒன்றிணைந்து வாழ்வது என அன்றாடம் நாங்கள் யானைகளுடன் பயணிக்கும் நாட்களைப் படம் பிடித்து தற்பொழுது, இத்திரைப்படம் விருதை வென்றிருப்பது தங்களுக்கு மட்டுமல்ல, தங்கள் கிராமத்தினருக்கும், அரசுக்கும் மிகப்பெரிய பெருமைதான்” எனத் தெரிவித்தார்.
இன்றளவும் யானைக் குட்டிகளுக்கு உடல்நிலை சரி இல்லை என்றால், அதற்குத் தேவையான மருந்து மாத்திரைகளைக் கொடுத்து, தங்கள் குழந்தைகளைப் போல் பார்த்துக் கொள்வதாக இருவரும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: The Elephant Whisperers: தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு ஆஸ்கர் விருது!