தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 24 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை இணையதளம் மூலம் பெறப்பட்டன.
இதற்காக சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 466 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 27, 28, 29ஆம் தேதி இணையதளம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 154 மையங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பம் செய்த ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 466 தேர்வர்களில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 580 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 37 ஆயிரத்து 866 பேர் தேர்வு எழுதவில்லை.
இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் செப்டம்பர் 30ஆம் தேதி தேர்வர்களின் விடைத்தாள், விடைகளை அவர்கள் பார்வையிடும் வகையில் வெளியிட்டிருந்தது. இதேபோல் தேர்வர்களுக்கான உத்தேச விடை குறிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்றுக்கான இணைய வழித் தேர்வு செப்டம்பர் 27, 28, 29 ஆகிய மூன்று நாளகள் நடத்தப்பட்டது. ஏற்கனவே 18 ஆம் தேதி 12 பாடங்களுக்கான மதிப்பெண்கள் விவரம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து கணக்கு, வேதியியல், விலங்கியல், பொருளாதாரம், வரலாறு ஆகிய ஐந்து பாடங்களுக்கான மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள www.trb.tn.nic முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வு மூலம் இரண்டாயிரத்து 144 முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று ஆகிய பணியிடங்களில் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
இதையும் படிங்க:முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கான பாடவாரியான மதிப்பெண்கள் வெளியீடு