தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றுவதற்கு 814 முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த பணியிடத்திற்கு விண்ணப்பித்த 30 ஆயிரத்து 833 தேர்வர்களுக்கான ஆன்லைன் எழுத்துத் தேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது. அந்தத் தேர்வில் ஏற்பட்ட சில தொழில்நுட்ப காரணங்களால் மூன்று மையங்களில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2018 -19ஆம் ஆண்டு முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கான ஆன்லைன் தேர்வு ஜூன்23 ,27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்தத் தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் அவர்களின் வினாத்தாள், விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த யூசர் ஐடி, கடவுச்சொல்லை பயன்படுத்தி www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.