சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுத் தாள் 2-க்கான கணினி வழித் தேர்வு ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரையில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிஆர்பி தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை 2022 மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 26-ம் தேதி வரையில் பெறப்பட்டது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது ஜனவரி மாதம் 31 முதல் பிப்ரவரி மாதம் 12-ம் தேதி வரை உள்ள தேதிகளில் தாள்-2ற்கு உரியத் தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தே வாய்ப்பு வழங்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். தேர்வுக்கான அட்டவணை, அனுமதிச்சீட்டு வழங்கும் விபரம் , தேர்வு கால அட்டவணை ஜனவரி மூன்றாம் வாரத்தில் அறிவிக்கப்படும்" என அதில் கூறியுள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வுத் தாள் 2 எழுதுவதற்கு 4 லட்சத்து ஆயிரத்து 885 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகைக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு