சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 3236 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் நடப்பாண்டில் 2955 காலி பணியிடங்களும், ஏற்கனவே நிரப்பப்படாமல் காலியாக உள்ள 251 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதற்கான திருத்தப்பட்ட பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இனவாரி ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2020-21 ஆம் ஆண்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று, கணினி பயிற்றுனர் நிலை ஒன்று ஆகிய நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஆன்லைன் வழி எழுத்து தேர்வு பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்பட்டது.
இந்த எழுத்துத் தேர்வின் முடிவுகள் ஜூலை 4 ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்களில் தமிழ் வழி சான்று பதிவேற்றம் செய்யவும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தி உள்ளது. மேலும் 17 பாடங்களுக்கு ஒரு பணியிடத்திற்கு 2 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வளாகத்தில் நடைபெறுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள பணி நாடுநர்களுக்கு அழைப்புக் கடிதம் 48 மணி நேரத்திற்கு முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். அதில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அழைப்பு கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது.
பணிநாடுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள் மற்றும் நேரத்திற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பதார்கள் அவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும், அடுத்தக்கட்ட பணித் தேர்விற்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள் ஒரு பணியிடத்திற்கு 2 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவதாலும், அவர்களின் சான்றிதழ்கள், ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதாலும் மட்டுமே இறுதித் தேர்வுக்கு உத்தரவாதம் இல்லை. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வளாகத்தின் வாசலில் கூட்டமாக சேர்வதை தவிர்த்து வளாகத்திற்குள் அமைதி காத்திட வேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரும் பணிநாடுநர்கள் அசல் கல்விச்சான்றிதழ்கள், முன்னுரிமைகோரும் சான்றிதழ்கள், அசல் ஆதார் அட்டை, இந்த சான்றிதழ்களின ஒரு செட் சுய சான்றொப்பம் இட்ட நகல், அழைப்புக்கடிதம், மற்றும் விண்ணப்ப நகல் ஆகியவற்றை தவறாமல் கொண்டு வர வேண்டும். செல்போன், பைகள் உள்ளிட்டப் பொருள்கள் கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டாது. வளாகத்திற்குள் பெற்றோர்கள், சிறார்கள் மற்றும் உறவினர்களை அழைத்து வரக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்எஸ்இ தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கு... சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி...