சென்னை: குழந்தை தத்தெடுப்பது குறித்து அளித்த விண்ணப்பத்தை நிராகரித்த விவகாரத்தைத் தொடர்ந்து, திருநங்கை பிரித்திகா யாஷினி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் குடியேற்றத் துறை அதிகாரியாக பணிபுரியும் திருநங்கை பிரித்திகா யாஷினி தாக்கல் செய்த மனுவில், 'பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வதால் ஏற்படும் வெறுமையை போக்க, குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்து டெல்லியில் உள்ள மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்ததாகக் கூறியுள்ளார்.
தத்தெடுப்பதில் சிறார் நீதி சட்டம், எந்த பாலின பாகுபாட்டையும் தெரிவிக்காத நிலையில், திருநங்கை என்ற காரணத்தை கூறி தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், அந்த உத்தரவை ரத்து செய்து, தனது விண்ணப்பத்தை நடைமுறைப்படுத்தி குழந்தையை தத்தெடுக்க உத்தரவிட வேண்டும்' எனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, மத்திய அரசும், மத்திய தத்தெடுப்பு ஆணையமும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், மீண்டும் இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பு இன்று (ஜூன் 30) விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் பதிலளிக்க மேலும் அவகாசம் வேண்டுமென மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுகொண்ட நீதிபதி, மேலும் 2 வார கால அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை ஜூலை 2வது வாரத்திற்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: மத்திய அரசின் டெல்லி அரசாணைக்கு எதிராக ஆம் ஆத்மி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
மேலும், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் திருநங்கை பிரித்திகா யாஷினி, ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறி, பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்து அதில் வெற்றிபெற்று இந்தியாவிலேயே முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
ஆனாலும், சப்-இன்ஸ்பெக்டர் பணியையும் பெரும் போராட்டங்களுக்கு பிறகு உயர்நீதிமன்றத்தை அணுகியே பெற்றார். இந்த நிலையில், குழந்தை தத்தெடுக்க அனுமதி கோரி டெல்லியில் உள்ள மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைனில் விண்ணப்பம் போட்டிருந்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உயர்நீதிமன்றத்தில் முதல்முறையாக தெலுங்கு மொழியில் தீர்ப்பு - கேரளாவை தொடர்ந்து தெலங்கானாவிலும் அமல் !