சென்னை: பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் பெண்களை ஒரு சில நடத்துநர்கள் மரியாதை குறைவாக நடத்துவதாகவும், தரக்குறைவான வார்த்தைகளில் பேசுவதாகவும் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதிலிந்தும் புகார்கள் எழுந்தன.
இது குறித்து அண்மையில் பேசிய தமிழ்நாடு நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன், "பெண்களை இழிவாக நடத்தும் நடத்துநர்களை முறத்தால் அடியுங்கள், எனக்கும் தெரிவியுங்கள் நான் அவர்களை வேலையைவிட்டு அனுப்புகிறேன்" என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இதற்கு நடத்துநர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், துரைமுருகன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையின் பல்வேறு பணிமனைகளில் மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இன்று அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, சென்னை மாதவரம், கே.கே. நகர், சைதாப்பேட்டை, கண்ணகி நகர், குரோம்பேட்டை, பூவிருந்தவல்லி, குன்றத்தூர், வியாசர்பாடி உள்ளிட்ட பணிமனைகளில் திரளான தொழிலாளர்கள் கூடி அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தொழிலாளர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட வார விடுமுறை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: 'இனி பழைய துரைமுருகனைப் பார்க்கப் போறீங்க; நான் உங்களுடைய அமைச்சர்!'