சென்னை: அரசுப் பேருந்துகளில் தூது அஞ்சல், பார்சல் சேவையை உருவாக்க வேண்டும் என்று ஈடிவி பாரத்தில் ஏற்கனவே சிறப்புச் செய்தி வெளியிட்ட நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அரசுப் பேருந்துகளின் வருவாயை அதிகரிக்க தூது அஞ்சல், பார்சல் சேவை, விளம்பரம் உள்ளிட்டவற்றை மேற்கொள்வது தொடர்பாக போக்குவரத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பேருந்து இயக்கத்தில் பயணக் கட்டண வருவாயை தவிர பிற வழிகளில், அதாவது விளம்பரம், தூதஞ்சல், பார்சல் சேவை மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான காலியாக உள்ள இடங்களை கண்டறிந்து அவற்றை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து எவ்வாறு வருவாயை பெருக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர், பொதுமக்கள் பெரிதும் சார்ந்துள்ள பொது போக்குவரத்தினை நிறைவாக அளித்திட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். எனவே, அதற்கு ஏற்ப அனைவரும் செயல்பட வேண்டும் என்றார்.
தேவைக்கு ஏற்ப சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை
பேருந்து வசதியே இல்லாத கிராமங்களை கண்டறிந்து மிக விரைவாக போக்குவரத்து வசதியை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும். சென்னை மாநகரில் சிற்றுந்துகள் இயக்கவேண்டிய இடங்களை கண்டறிந்து தேவைக்கு ஏற்ப சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றார்.
அரசுப் பேருந்தில் விளம்பரம், தூதஞ்சல், பார்சல் சேவை
மகளிர் கட்டணமில்லா பயண சேவையில் எவ்வித குறைபாடுகளும், விமர்சனங்களும் இல்லாமல் இத்திட்டத்தை தனிக்கவனம் செலுத்தி மிகச் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுத்திட வேண்டும். பேருந்து இயக்கத்தில் பயணக் கட்டண வருவாயை தவிர பிற வழிகளில், அதாவது விளம்பரம், தூதஞ்சல், பார்சல் சேவை மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான காலியாக உள்ள இடங்களை கண்டறிந்து அவற்றை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து வருவாயினை பெருக்கிட வழி ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைகளை அவ்வப்போது கனிவுடன் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பேருந்துகளை நவீனமயமாக்கல் மற்றும் கிளை வளாகங்களின் உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்த திட்டங்களை விரைந்து செயல்படுத்திட ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
'நிர்பயா' நிதி மூலம் பேருந்துகளில் கேமரா
குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பேருந்துகள் இயக்கத்தை கண்காணித்து நெறிப்படுத்திட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் விளக்கினார். 'Locate & Access My Bus' என்ற தனி செயலியினை பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்தும், வரும் காலங்களில் செயல்படுத்தப்பட உள்ள IT Initiatives குறித்தும், மகளிரின் பேருந்து பயணப் பாதுகாப்பினை கண்காணித்திடும் வகையில், 'நிர்பயா' நிதி மூலம் மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையங்களில் கேமராக்கள் பொருத்தும் திட்டத்தின் செயலாக்கம் குறித்தும் தெரிவித்தார்.
மேலும், போக்குவரத்துக் கழகங்களின் இயக்க செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில், Dash Boardயை நிறுவிட நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவரித்தார். அதோடு உலக வங்கி நிதி உதவியுடன் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்தும், தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் மூலமாக மாநகர் போக்குவரத்துக் கழக கிளை வளாகங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, அதன் மூலம் இதர வருவாயை ஈட்டுவது குறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
இதையும் படிங்க: விரைவில் சுற்றுலாத்தலங்களில் நீர் விளையாட்டுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் - சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தகவல்!