சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு சென்னை மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகின்றது. இதில் பணியிட மாறுதல் வெளிப்படையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் இன்று (மே 24) முதல் ஜூன் 2ஆம் தேதி வரை வெளிப்படையாக நடைபெறுகிறது.
மேலும், ஒரு மருத்துவர் மாற்றுப்பணி இடத்தை தேர்வு செய்த பின்னர், அந்தப் பணியிடம் காலியாக காட்டப்பட்டு, வேறு மருத்துவரும் பணியிட மாறுதல் பெறும் வகையில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதனை மருத்துவச் சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் நேரடியாக கண்காணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வு குறித்து இதன் இயக்குநர் நாராயண பாபு கூறுகையில், “தமிழ்நாட்டிலுள்ள 37 அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்வி இயக்கத்தின்கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு தற்பொழுது நடைபெற்று வருகிறது. மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு வருகிற 26ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
தொடர்ந்து 27ஆம் தேதி, பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் மற்றும் மருத்துவ சேவை பணிகள் கழகத்தில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், மருத்துவ கல்வி இயக்குநரகத்தின்கீழ் பணியிட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே அரசு மருத்துவர்களாக பணிபுரிந்து முதுகலைப் பட்டம் படித்தவர்களுக்கு வரும் 1ஆம் தேதியுடன் வகுப்புகள் முடிவடைகின்றன.
இதனால் அவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஜூன் 2ஆம் தேதி நடத்தப்படும். மேலும் ஒரு மருத்துவர் பணியிடத்தை மாற்றம் செய்து பெற்றவுடன், வேறு மருத்துவர் அந்த இடத்தினைப் பெறும் வகையில் காலியாக காண்பிக்கப்படும். பணியிட மாறுதல் கலந்தாய்விற்கு 1,600 மருத்துவர்கள் விண்ணப்பித்துள்ளனர். காலிப்பணியிடங்களை உடனடியாக காண்பிக்கப்படுவதால், சுமார் 3,000 மருத்துவர்கள் வரையில் பணியிடமாறுதல் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் தொடங்கியது மலர்க்கண்காட்சி