எஸ்.பி.பி. குணமடைய வேண்டி திருநங்கைகள் சர்வமத கூட்டுப் பிரார்த்தனை - பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டுதல்
சென்னை: எஸ்.பி.பி. பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என சகோதர அமைப்பைச் சேர்ந்த திருநங்கைகள் எம்.ஜி.எம். மருத்துவமனை முன்பு ஒன்றிணைந்து சர்வமத கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர்.
கரோனா பாதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் எம்.ஜி.எம். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகிறார் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். இவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனத் திரைத் துறையினர், அரசியல் தலைவர்கள் என அனைவரும் பிரார்த்தனை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த நிலையில் சகோதர அமைப்பைச் சேர்ந்த திருநங்கைகள் எம்.ஜி.எம். மருத்துவமனை முன்பு ஒன்றிணைந்து சர்வமத கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர். முதலில் இந்து முறை பிரார்த்திக்கப்பட்டது. பின்னர் கிறிஸ்தவ முறைப்படி ஜெபம் செய்யப்பட்டது. கடைசியாக இஸ்லாமிய முறைப்படி பிரார்த்திக்கப்பட்டது.
பிரார்த்தனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சகோதர அமைப்பைச் சேர்ந்த சுதா, சிறு வயது முதல் எஸ்.பி.பி. பாடல்களைக் கேட்டு வளர்ந்தோம். அவர் கரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.
நாங்கள் எந்த மதத்தையும் சார்ந்தவர்கள் இல்லை, அதனால் அனைத்து மதங்களிலும் பிரார்த்தனை மேற்கொண்டோம். எங்கள் பிரார்த்தனை நிறைவேறி அவர் மீண்டும் வந்து பாட வேண்டும்" எனத் தெரிவித்தார்.