வெற்றிப் பாதையில் திருநங்கைகள் என்ற தலைப்பில் திருநங்கைகளின் வளர்ச்சி குறித்து பிரம்மாண்டமான விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.
தமிழ்நாட்டிலுள்ள திருநங்கைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் பல அமைப்புகள் இணைந்து நடத்திய இவ்விழாவில்,சென்னை காவல்துறை இணை ஆணையர் ஆர். சுதாகர், பழம்பெரும் நடிகைகள் சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, அம்பிகா, கௌதமி, தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் ஆடல், பாடல், பழங்கால கலைகள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து ஃபேஷன் ஷோ திருநங்கை 2019 நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான திருநங்கைகள் இதில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும், இவ்விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த திருநங்கைகளுக்கு விருது வழங்கப்பட்டது. வெற்றிப் பாதையில் திருநங்கைகள் நிகழ்ச்சியின் மூலம் திருநங்கைகளின் கல்வி மருத்துவம் மற்றும் சமூக நலத்திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு இந்நிகழ்வில் நன்றி கூறப்பட்டது.
இந்நிகழ்வு குறித்து திருநங்கை திலோத்தமா பேசும்போது, இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றால் திருநங்கைகள் சாதிக்க உதவேகம் கிடைக்கும் என்றார்.
இதையும் படிங்க: 'காற்று மாசு கூட்டம்' - புறக்கணித்த எம்.பி.கள்!