திருநங்கையான பிரஸ்ஸி சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள டாட் ஸ்கூல் ஆஃப்டிசைனில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். ‘மெட்ராஸ் மிஸ் இந்தியா’ மாடலிங் போட்டியில் முதலிடம் பெற்ற இவர், திருநங்கைகளால் ஃபேஷன் உலகிலும் சிறந்து விளங்க முடியும் என நிரூபித்துள்ளார். மேலும் பல திருநங்கைகளுக்கு ஆன்லைனில் ஃபேஷன் வகுப்புகளை எடுத்துவருகிறார்.
சமீபத்தில் ‘முகக்கவச ஆடைதான் எதிர்கால ட்ரெண்டாக இருக்கும்’ என்ற மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை கவனித்த பிரஸ்ஸி, அதனால் ஈர்க்கப்பட்டு புதிய முகக்கவச ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளார்.
கரோனா காலத்தில் முகக்கவசங்கள் இன்றியமையாததாக மாறியுள்ளன. இதையே விழிப்புணர்வாகக் கொண்டு முகக்கவச ஆடையை தயாரித்துள்ளார் பிரஸ்ஸி. தீபாவளி பண்டிகை வரவிருப்பதை முன்னிட்டு, பண்டிகை காலத்தில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனமாக இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த ஆடையை உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து பிரஸ்ஸி கூறுகையில், "சமூக வலைதளங்களில் வரும் காலங்களில் "மாஸ்க்கே ட்ரெஸாக மாறிடும்போலயே" என்பது போன்ற மீம்ஸ்கள் என்னை சிந்திக்க வைத்தது. ஆடை வடிவமைப்பு துறையைச் சார்ந்த நான், ஏன் அதனை செய்து காட்டக்கூடாது என எண்ணி 100க்கும் அதிகமான மாஸ்க்குகளைக் கொண்டு ஓரிரு நாள்களில் இந்த ஆடையை தயாரித்தேன்.
இதனை தயாரிக்க சுமார் 2000-2500 ரூபாய் வரை செலவானது. இதன்மூலம் என்னை போன்ற திருநங்கைகளும் அவரவர் துறைகளில் தங்களால் முடிந்த சாதனைகளை மேற்கொண்டு திருநங்கை சமூகத்திற்கு பெருமை சேர்க்கவேண்டும்" என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
கரோனா கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஃபேஷன் ஷோ நடத்தப்படாததால் தற்போது தாம் இந்த ஆடையை அணிந்து போட்டோ ஷூட் செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க... ஆதரவற்ற குழந்தைகளின் தாய் திருநங்கை நூரி சலீம்!