சென்னை: பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பணி இடமாறுதல் அறிவிக்கப்பட்டது. இப்பொழுது அதனை எதிர்த்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி வழங்கக் கூடாது எனச் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் தவிர, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணியிடம் மாறுதல் கலந்தாய்வும் மற்றும் தொடக்கப்பள்ளி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் பணியிட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வும் நடத்தப்பட்டன.
அதேபோல் பள்ளிக் கல்வித்துறையில், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தக்கூடாது எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன.
அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியருக்கான பணிகள் காலியாக இருக்கும் காரணத்தால், கல்வியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தக்கோரி அரசுக்குக் கோரிக்கை எழுந்துள்ளது.
வரும் ஜூன் 7-ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கான நோட்டுகள், புத்தகம், சீருடைகளை வழங்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், தலைமை ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் அப்பணிகளைப் பள்ளியைத் திறந்து முறையாகத் தொடர்வதில் சிரமம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
மேலும், பள்ளிகளில் நிர்வாக பணிகளைக் கவனிக்கப் பொறுப்பு தலைமை ஆசிரியர் பதவி, மூத்த முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் அவர் தங்களது வழக்கமான பாடம் கற்பிக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுவதாகவும் இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
பின்னர், வெளிப்படை தன்மையுடன் நடத்தப்பட்ட இந்த கலந்தாய்வின் மூலம் தொடக்கக் கல்வித் துறையில் 424 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும், 1,111 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பணி புரியும் 1,777 இடைநிலை ஆசிரியர்களும் ஒன்றியத்திற்குள் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர். புறக்கணித்துறை மற்றும் பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: "அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்" - ஆசிரியர்கள் வலியுறுத்தல்!