சென்னை கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் செல்லும் ரயில்களும், கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து கடற்கரை ரயில் நிலையம் செல்லும் ரயில்களும் வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் பகுதி வழியாக அமைக்கப்பட்டுள்ள தண்டவாளம் வழியாக செல்லும். அடிக்கடி ரயில்கள் செல்வதால் போஜராஜன் பகுதி மக்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனைப்போக்க அந்தப் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு தண்டவாளத்திற்கு கீழே பள்ளம் தோண்டப்பட்டது.
இந்நிலையில் நேற்றிரவு பெய்த மழையில் அங்கிருந்த மண் கரைந்து சரிந்தது. இதனால் ரயில்வே தண்டவாளம் சிறிது கீழே இறங்கியது. இது தொடர்பாக உடனடியாக ரயில்வே அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அலுவலர்கள், கீழிரங்கிய தண்டவாளப் பகுதியை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த வழியாக இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் பேசின் பிரிட்ஜ், வண்ணாரப்பேட்டை வழியாக தற்காலிகமாக இயக்கப்பட்டு வருகின்றன. மதியம் 12 மணிக்கு மேல் இவ்வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.