பெங்களூருவில் இருந்து இன்று காலை சென்னை வந்த பெங்களூரு விரைவு ரயிலில் ரயில்வே விஜிலன்ஸ் அலுவலர்கள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஏசி பெட்டியின் முதல் வகுப்பில் பயணம் செய்த திருச்சியைச் சேர்ந்த கலைராஜ்(48) என்பவரது பயணச் சீட்டை வாங்கி சோதனை செய்தனர். அப்போது, அவர் விவிஐபி சலுகையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து, விவிஐபி சலுகைக்கான பாஸை விஜிலென்ஸ் அலுவலர்கள் வாங்கி சோதனை செய்தனர். ஆனால் அந்த பாஸ் வேறு ஒருவர் பெயரில் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து கலைராஜனிடம், அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அதில், திமுக ஆட்சிக்காலத்தில் வனத்துறை அமைச்சராக இருந்த என்.செல்வராஜின் மகன் தான் இந்த கலைராஜ் என்பதும், அவரின் தந்தை செல்வராஜ் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்துவிட்டார் என்பதும் தெரியவந்துள்ளது. அவர் பதவியில் இருந்தபோது வழங்கப்பட்ட ரயில்வே பாஸை திரும்பி ஒப்படைக்காமல் அவரது மகன் கலைராஜ் சட்ட விரோதமாகப் பயன்படுத்தியுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, விஜிலன்ஸ் அலுவலர்கள் அவரை சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து, ரயில்வே போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.