சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தற்போது திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, இன்று வரை அதி கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்த மழையால் ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக் குடியிருப்புகளைத் தண்ணீர் சூழ்ந்தது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடியில் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களும் தொடர்ந்து பகுதி ரீதியாகவும், சில ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பயணிகள் வருகை பொறுத்தவாறு இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் தமிழக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பயணிகளின் வருகைக்கேற்ப மட்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் 60 பேருந்துகள் தென்மாவட்டங்களுக்கு இயக்க முடிவு செய்த நிலையில், மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாகப் பயணிகளின் வருகைக்கேற்றவாறு குறைவான பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தென் மாவட்டங்களிலிருந்து பிற ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிலைமையைக் கண்காணித்து, பயணிகளின் தேவைக்கு ஏற்ப மட்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது. மேலும், கனமழையின் காரணமாகத் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்கள் ரத்து: தூத்துக்குடி-மைசூரு விரைவு ரயில், நாகர்கோவில்-கோவை அதிவிரைவு ரயில், நாகர்கோவில்-பெங்களூரூ மெயில், ஆகியவை நாளை (டிச.19) பகுதி ரீதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை எழும்பூர்- குருவாயூர் ரயில், ஜோலார்பேட்டை-ஈரோடு ரயில், ஈரோடு-திருச்சி ரயில்களும் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: "இலவச திட்டங்கள் வேண்டாம்.. நீர் பாசன திட்டங்களை நிறைவேற்றுங்கள்.." - தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!