சென்னை: ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்துவருபவர் ஜான்பீட்டர்லியானி (58). இவர் மாதவரம் போக்குவரத்துப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவருகின்றார். இந்நிலையில் நேற்று (ஆக.10) மதியம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் பள்ளி மாணவர்களுக்குப் பரிசுத் தொகை, நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதனையடுத்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜான்பீட்டர் நேற்று காலை ரெட்டை ஏரி பாடி சாலை சாஸ்திரி நகரில் முதலமைச்சர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது உதவி ஆய்வாளர் ஜான் தனது இருசக்கர வாகனத்தை சாஸ்திரி நகர் சாலையோரம் நிறுத்திவிட்டுப் பாதுகாப்புப் பணியிலிருந்தார்.
அப்போது,உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகனம், மதுபோதை கண்டறிய உதவும் கருவி, பணப்பரிவர்த்தனை செய்யும் இயந்திரம், ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
பின்னர், இது குறித்து உதவி ஆய்வாளர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த காவல் துறையினர் உதவி ஆய்வாளரின் பைக், டிடி கருவி, ஸ்வைப்பிங் இயந்திரத்தைத் திருடிச் சென்ற நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: சி.ஆர்.பி.எஃப். வீரரைக் கண்டுபிடிக்க கோரிய வழக்கு: சிபிஐக்கு நோட்டீஸ்