சென்னை: பொங்கல் முடித்து திரும்புவோருக்காக இன்று (ஜனவரி 17) 7,755 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனால் கடந்த 12ஆம் தேதி முதலே சென்னை உள்ளிட்ட நகரங்களில் படிப்பு, பணி, தொழில் நிமித்தமாக தங்கி இருப்போர், சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்றும் அரசு விடுமுறை அறிவித்த நிலையிலும் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் பலர் இன்று சென்னை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
தனியார் பேருந்துகள், அரசு சிறப்புப் பேருந்துகள் மற்றும் கார்களில் சென்னையை நோக்கி வருவதால் சென்னையில் நுழைவு வாயிலான பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து ஊர்ந்து சென்றன. மேலும் போக்குவரத்து காவல் துறையினர் குறைந்த அளவே பணியில் இருப்பதால் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியாமல் திணறினர்.
சிலர் இன்றும் நாளையும் சென்னையை நோக்கி வர இருப்பதால் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Alanganallur Jallikattu: 21 காளைகளை வென்ற கார்த்திக் சிறந்த வீரராக தேர்வு!