சென்னை: 44ஆவது உலக சதுரங்கப் போட்டியின் நிறைவு விழா சென்னை பெரியமேடு இராஜா முத்தைய்யா சாலையில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் 09.08.2022 மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் பல்வேறு நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொள்ள உள்ளார்கள்.
இதனால் சென்னைப் பெருநகர போக்குவரத்துக் காவல் துறையின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் 09.08.2022 அன்று மாலை 3 மணி முதல் இரவு 9 மணிவரையில் இராஜா முத்தைய்யாச் சாலை, ஈ.வே.ரா பெரியார் சாலை, மத்தியச் சதுக்கம் மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் தேவை ஏற்படின் மணி முதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் இராஜா முத்தையச் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை ஈ.வி.கே சம்பத் சாலை மற்றும் ஈ.வே.ரா சாலை வழியாக செல்லலாம். அதேபோன்றே ஈ.வி.கே சம்பத் சாலை ஜெர்மயா சாலைச் சந்திப்பிலிருந்து இராஜா முத்தையாச் சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
வணிக நோக்கிலான வாகனங்கள் ஈ.வே.ரா சாலை கெங்குரெட்டிச் சாலைச் சந்திப்பு, நாயர் பாலச் சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. மேலும் பிராட்வேயிலிருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கச் சாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும்.
இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்றுத் தங்கள் வழித்தடங்களை அடையலாம். எனவே வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலை வழித்தடங்களைத் தவிர்த்துப் பிற வழித்தடங்களைப் பயன்படுத்தக் போக்குவரத்து காவல்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ரல் ரயில் நிலையத்திற்கு வரவேண்டிய பொதுமக்கள் அவர்களது பயணத்திட்டத்தினை முன்கூட்டியேத் திட்டமிட்டுக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காமன்வெல்த் 2022: இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு வெண்கலம்