சென்னை: கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், இன்று மறைந்த விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருவதால், கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜயகாந்த், நுரையீரல் அழற்சி மற்றும் கரோனா தொற்று காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் இன்று (டிச.28) காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, விஜயகாந்த் உயிரிழந்த செய்தி, தேமுதிக தொண்டர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், விஜயகாந்தின் உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு அங்கிருந்து அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தேமுதிக தொண்டர்களும், விஜயகாந்த்தின் ரசிகர்களும், பொதுமக்களும், கோயம்பேடு பகுதியில் அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டுள்ளனர். இதன் காரணமாக, கோயம்பேடு மேம்பாலம் மற்றும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதனால், தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு, பொதுமக்களை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் போக்குவரத்து நெரிசல்களை சரி செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அதில் கோயம்பேடு மேம்பாலத்தில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், அண்ணாநகர் முதல் கோயம்பேடு வரை ஒரு வழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், பாடி மேம்பாலம் வரை போக்குவரத்து நெரிசல் இருப்பதால், வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தருமாறும் போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: ரைஸ்மில் முதல் கோட்டை வரை..! விஜயராஜ் கேப்டன் ஆன கதை..!