ராமேஷ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று(அக். 18) கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த இலங்கை கடற்படையினர், 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள இந்திய மீனவர்களின் படகுகளையும் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்கள் நடத்திவருவதைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர், "தமிழ்நாடு மீனவர்கள் தங்கள் பிழைப்புக்காக மீன்பிடித்தலை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். இலங்கை கடற்படையினரால் அவர்கள் ஏற்கனவே பல முறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழ் மீனவர்கள் கைது, தாக்குதல்கள் ஆகியவை முன்பைவிட தற்போது மிகவும் மோசமாகியுள்ளது. மீனவர் சங்கத் தலைவர்களின் தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகும், இந்த பிரச்னை இன்றுவரை தீர்க்கப்படாமல் உள்ளது.
கச்சத்தீவு கடற்பகுதியில்தான் இந்த பிரச்னை தொடர்ந்து எழுகிறது. இரு தரப்பு மீனவர்களுக்கும் சமமான மீன்பிடி இடம் இருப்பதை உறுதி செய்ய அரசு இதில் தலையிட வேண்டும்.
கரோனா காலத்தில் இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் இழிவானது. எனவே, இதில் நீங்கள் உடனடியாக தலையீட்டு, தீர்வை வழங்க வேண்டும் என்று திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மீனவர்களுக்கு ஏற்பட்ட தேசங்களுக்கான இழப்பீட்டை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ”யார் இதைச் செய்றீங்களோ, அவங்களுக்கே எங்க ஓட்டு!” - பிகாரில் அரசியல் கட்சிகளுக்கு ஆஃபர்