சென்னை: சுற்றுலாத்தலங்களை மேம்படுத்துவது தொடர்பாக 22 புதிய அறிவிப்புகளை, சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டார். அவை பின்வருமாறு:
* சர்வதேச சுற்றுலாத்தலமான ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி பல்வேறு நவீன வசதிகளுடன் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
* ஏற்காட்டில் உள்ள எமரால்டு ஏரியில் 3D (முப்பரிமாண) புரொஜக்சன் மேப்பிங் தொழில்நுட்பத்துடன் கூடிய, நீர் சார்ந்த ஒலி ஒளி காட்சி பொது-தனியார் பங்களிப்பில் அமைக்கப்படும்.
* ஏற்காடு நிலச் சீரமைப்பு, காட்சி முனை உள் கட்டமைப்பு மற்றும் பிற சுற்றுலா வசதிகளுடன் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
* நீலகிரி மாவட்டம், உதகமண்டல ஏரி பகுதியில் ரூ.5 கோடி செலவில் பார்வையாளர் மாடம், நடைபாதைகள், இருக்கைகள், மின்விளக்குகள் அமைக்கப்படும்.
* மயிலாடுதுறை மாவட்டத்தின் கலாசார பாரம்பரிய நகரான தரங்கம்பாடியில் பல்வேறு சுற்றுலா வசதிகள் ரூ.3 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
* தமிழ்நாட்டின் பழங்கால சமணத் தலங்களில் ஒன்றான சித்தன்னவாசல் ரூ.4 கோடியில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
* கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டி பாலம் பல்வேறு வசதிகளுடன் ரூ.3 கோடியில் சீரமைக்கப்படும்.
* கன்னியாகுமரியை சுற்றுச்சூழல் சுற்றுலாத்தலமாக மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை ரூ.1 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.
* யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னமான அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் நுழைவு வளாகம், வாகன நிறுத்துமிடம், வழிகாட்டி பலகை, மின் வாகனங்கள் மற்றும் பிற வசதிகள் ரூ. 5 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
* திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணை சாகச சுற்றுலா வசதிகள், பல்லுயிர் பூங்கா மற்றும் இதர வசதிகளுடன் ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
* முட்டுக்காட்டில் 30 ஏக்கர் தீவுப் பகுதியை கடற்கரை சுற்றுலாத்தலமாக மேம்படுத்தும் வகையில் சாகச விளையாட்டுகள், நடைபாதைகள், பறவைகளை பார்வையிடுவதற்கு மாடம் மற்றும் இதர வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் ரூ.5 கோடி மதிப்பில் உருவாக்கப்படும்.
* செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரை ஓய்வு வளாகத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக ரூ. 20 கோடி மதிப்பீட்டில் அதிநவீன மாநாட்டு அரங்கம் கட்டப்படும்.
* நீலகிரி மாவட்டம், தேவாலா பகுதியில் தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து சாகச விளையாட்டுகள், பார்வையாளர் மாடம், மலர் பூங்கா போன்றவை பல்வேறு வசதிகளுடன் கூடிய சுற்றுலாத்தலமாக ரூ. 3 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
* ஏற்காடு, கொடைக்கானல், உதகை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள படகு இல்லங்களில் மிதவை உணவகங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ரூ.15 லட்சம் ஒதுக்கப்படும்.
* தமிழ்நாட்டில் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு புதிய ஆட்சி முறைகள் அமைத்தல் மற்றும் தற்போதைய காட்சி முனைகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் ரூ. 10 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
*இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து தமிழ்நாட்டில் முக்கிய கோயில்களில் வழிகாட்டி சுற்றுலாக்கள் நடத்தப்படும்.
* தமிழ்நாட்டில் மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக பல்வேறு பங்குதாரர்களுடன் இணைந்து ஆண்டுதோறும் சர்வதேச மருத்துவ சுற்றுலா மாநாடு சென்னையில் நடத்தப்படும்.
* திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள அரித்ரா நதி கோயில் குளம், படகு இல்லம் மற்றும் பிற வசதிகளுடன் சுற்றுலாத்தலமாக ரூ. 50 லட்சம் ஒதுக்கப்படும்.
* ஈரோடு மாவட்டம், அந்தியூர் பெரிய ஏரி படகு இல்லம் மற்றும் பிற வசதிகளுடன் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.
* மதுரையில் நடத்தப்பட்டு வரும் ஹோட்டல் தமிழ்நாடு அலகு இரண்டில், கூடுதல் விருந்து மண்டபங்கள் (Banquet halls) ரூ. 7 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
* ராமேஸ்வரத்தில் உள்ள ஓட்டல் தமிழ்நாட்டில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும்.
* திருப்பதி சுற்றுலா மற்றும் பிற சுற்றுலாக்களை இயக்குவதற்கு ஏற்படும் கூடுதல் தேவைகளை பூர்த்தி செய்ய ரூ. 2.80 கோடி செலவில் 43 இருக்கைகளுடன் கூடிய 2 குளிர்சாதன 'Volvo' பேருந்துகள் வாங்கப்படும்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 500 அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும் - அமைச்சர் கீதா ஜீவன்