தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்ட புரெவி புயல் தீவிரமடைந்து நேற்று (டிச. 02) இரவு திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. தற்போது ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வடகிழக்கில் 90 கிலோமீட்டர் துாரத்தில் புயல் நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த காற்று வீசிவருகிறது. குறிப்பாக ராமேஸ்வரம் தீவு, பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி, மண்டபம் பகுதிகளில் 50 லிருந்து 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் அந்தப் பகுதிகளில் உள்ள மரங்கள் சேதமடைய அதிக வாய்ப்புள்ளது.
இந்த பாதிப்புகளைத் தடுக்க நேற்று தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தமிழ்நாட்டில் புயல் பாதிப்பிற்கு உள்ளாகும் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். அதன் விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி கன்னியாகுமரி-2 குழுக்கள், தூத்துகுடி-2 குழுக்கள், மதுரை-1 குழு, நாகப்பட்டினம்-2 குழுக்கள், ராமநாதபுரம்-3 குழுக்கள், திருநெல்வேலி-3 குழுக்கள், கடலூர்-1 குழு என மொத்தம் 14 குழுக்கள் தமிழ்நாடு விரைந்துள்ளதாகத் தெரிகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி, புயல் பாதிப்பு அதிகம் உள்ள புதுச்சேரி, கேரளா மாநிலத்திற்கும் மீட்புப் படையிர் விரைந்துள்ளனர்.
அதன்படி, புதுச்சேரி மாநிலம் காரைக்கால்- 1 குழுவும், கேரளாவில் இடுக்கி-2 குழுக்கள், கொல்லம்- 1 குழு, பத்தனம்திட்டா- 1 குழு, ஆலப்புழா- 1 குழு, திருவனந்தபுரம்-1 குழு, கோட்டையம்- 1 குழு, எர்ணாகுளம்- 1 என மொத்தம் 27 குழுக்கள் மீட்புப் பணிக்காக விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க: புரெவி புயல் தாக்கம்: ராமேஸ்வரத்தில் 120.20 மிமீ மழைப்பதிவு!