சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று (31.07.2023) கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை நடத்திய பின் 500 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் விலையில் இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், தக்காளியின் வரத்து குறைவு, விளைச்சல் பாதிப்பு, அதிகமாக கொள்முதல் செய்வது, நியாயவிலைக் கடைகளின் விரிவாக்கம் போன்றவை ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் தக்காளியை மலிவான விலைக்கு வழங்குவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், "தக்காளியின் விலை ஒரு மாத காலமாக உயர்ந்து கொண்டே இருப்பது நாம் அறிந்த ஒன்றுதான். தக்காளியின் விலையை குறைப்பதற்காக முதல் கட்டமாக 66 பசுமை பண்ணை காய்கறி கடைகளில் ரூபாய் 60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதன் பின்னர் சென்னை மற்றும் பெருநகரங்களில் 111 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. தக்காளியின் உற்பத்தி குறைவு காரணமாகவே தக்காளியின் விலை உயர்ந்து உள்ளதையும், தக்காளியை யாரும் பதுக்கி வைக்கவில்லை என்பதையும் உணர முடிகிறது. கூடுதலான விலைக்கு கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகள் மூலம் குறைவான விலைக்கு கொடுத்திருக்கிறோம்.
மூன்றாவது கட்டமாக 300 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனையை விரிவாக்கம் செய்தோம். தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. தக்காளி அனைவருக்கும் கிடைக்கும் விதமாக நாளை முதல் தமிழகம் முழுவதும் குறைந்தது 500 நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தக்காளியின் விளைச்சல் போதுமானதாக இல்லை என பல மாநிலங்களில் இருந்து செய்திகள் வருகின்றன.
தக்காளியின் விலை ஓரிரு வாரத்தில் சரியாகிவிடும் என்று நினைத்தோம். ஆனால், விளைச்சல் குறைவு காரணமாக அதிகரித்து கொண்டு இருப்பதைப் பார்க்கும்போது கவலை அளிக்கிறது. இந்த மிகப்பெரிய சுமையை குறைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் சராசரியாக 10 கடைகளிலும், பரப்பளவு அதிகமாக கொண்ட மாவட்டங்களில் 15 கடைகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. விலை ஏற்றத்திற்கு விளைச்சல் குறைவுதான் காரணம், வியாபாரிகள் அல்ல. இது, இயற்கையாக உருவான விலை ஏற்றம், செயற்கையாக உருவாக்கப்படவில்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க: இரட்டை சதம் அடித்த தக்காளி!... விலை குறையாததற்கு காரணம் என்ன?