சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மெதுவாக விலகிக் கொண்டு வருகிறது. இதன் காரணமாக, வடதமிழகம் மற்றும் புதுச்சேரி மற்றும் சில மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மேலும், ஜனவரி 17ஆம் தேதி அன்று, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதைத் தொடர்ந்து, 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும், வருகிற 24ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். மேற்குதொடர்ச்சிமலைத் தொடர்களின் ஒரு பகுதியான நீலகிரி மாவட்டத்தில், இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழையானது எங்கும் பதிவாகவில்லை. தற்போது மீனவர்களுக்கும் சிறப்பு எச்சரிக்கை எதுவுமில்லை. மேலும், கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. ஜனவரி 1ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை பதிவான மழை அளவு என்பது, 49.3 மில்லி மீட்டர் ஆகும். இந்த காலக்கட்டத்தில் இயல்பான மழை அளவு 9.1 மில்லி மீட்டர் ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் வெப்பநிலை கணிசமாக குறைந்துள்ளது. அதேபோல, நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் கணிசமாக வெப்பநிலை அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரிய மாற்றமில்லை. திருப்பத்தூர், கோவை, சேலம் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமான வெப்பநிலை அதிகரித்துள்ளாதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: பாலமேடு ஜல்லிக்கட்டு; விறுவிறுப்படைந்த 6வது சுற்றின் நிலவரம்!