சென்னை: அமெரிக்காவில் நிலவிய பொருளாதாரச் சூழல், தொடர்ந்து திவாலான வங்கிகள் என பல்வேறு காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்யத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து, மே மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிகபட்சமாக ரூ.45 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த வாரத்தில் தங்கத்தின் விலையானது இறங்குமுகமாக ரூ.43,500 முதல் ரூ.43,600 வரை இருந்து வந்தது. இதனையடுத்து, மீண்டும் இன்று (ஆகஸ்ட் 30) தங்கத்தின் விலை ரூ.44,000-ஐக் கடந்து விற்பனை ஆகிறது.
சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று (ஆகஸ்ட் 29) ரூ.160 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 30) ஒரே நாளில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,530-க்கும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.44,240-க்கும் விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ.80,700-க்கும் விற்பனையாகிறது.
இனி தங்கத்தின் விலை எப்படி? தங்கத்தின் விலை தினமும் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கடந்த வாரத்தில் இருந்தே தினமும் தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாகக் காணப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் பெடரல் வங்கியின் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இதுவும் ஒரு காரணமாக அமைய, இதனால் உலகம் முழுவதும் அமெரிக்க டாலர் நிகரில் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் அடைந்து வருகிறது. இதன் காரணமாகவே இந்த மாத தொடக்கத்தில் இந்தியச் சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை குறைந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களில் தங்கத்தின் விலை மறுபடியும் 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
தொடர்ந்து சர்வதேச பொருளாதாரச் சுழலில், சர்வதேச அரசியல் பதற்றம், பணவீக்கம் என்று பல்வேறு பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. மேலும், அமரிக்க பத்திர சந்தையில், சற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தங்கத்தின் விலை இனி ஏறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என பொருளாதார நிபுணர்கள் வட்டாரம் தெரிவிக்கின்றது.
இதையும் படிங்க: 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் தங்கம் வெல்வார்...பயிற்சியாளர் காசிநாத் நாயக்!