சென்னை: சென்னை கொடுங்கையூர் ஜம்புலிங்கம் தெருவில் ஒருவர் கழுத்தில் ரத்தக் காயங்களுடன் மயக்க நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த நபரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர், அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின், போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் கொடுங்கையூர் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த மோகன் பவுல்ராஜ் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், கொலை முயற்சி குறித்து காரணம் கேட்டபோது, தன்னிடம் சில நபர்கள் பணம் கேட்டு மிரட்டியதாகவும், தர மறுத்ததால் கழுத்தை அறுத்துவிட்டு தன்னிடம் இருந்த 13 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது அதில், பவுல்ராஜ் இருசக்கர வாகனத்தில் சம்பவ இடத்திற்குச் சென்று ஒரு முட்புதரில் நின்று கொண்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுவிட்டு, சிறிது தூரம் நடந்து சென்று மயங்கி விழுந்தது தெரிய வந்துள்ளது. பின்னர், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது மோகன் பவுல்ராஜ் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போக்சோ வழக்கு கைதி தப்பி ஓட்டம் : தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் சென்னையில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். அப்போது அங்கு பணிபுரிந்து வந்த 16 வயது சிறுமியை பல நாட்களாக அவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சிறுமியின் உறவினர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் மகளிர் போலீசார், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். சுமார் 130 நாட்களுக்கு மேலாக அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்து வந்தார். இந்த நிலையில், இன்று பாதிக்கப்பட்ட சிறுமியையும் கைது செய்யப்பட்ட அந்நபரையும் டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது, 2 காவலர் பாதுகாப்பில் அழைத்து வரப்பட்ட அவர் கழிவறைக்குச் செல்வதாக கூறிவிட்டு, பின்னர் அங்கு இருந்த பின்பக்க ஜன்னல் வழியாக தப்பி ஓடி உள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்யானை கடித்ததில் ஊழியர் படுகாயம்: சென்னை வண்டலூர் அடுத்த ஓட்டேரியைச் சேர்ந்தவர் குமார் (50). இவர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நிரந்தரப் பணியாளராக, நீர்யானை பராமரிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் குமார் நீர் யாணையின் கூண்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென கூண்டிற்குள் வந்த நீர்யானை, குமாரை சரமாரியாக கடித்துள்ளது.
இதனையடுத்து, அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த சக ஊழியர்கள், உடனடியாக நீர்யானை பிடியில் இருந்து குமாரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரனை செய்து வருகின்றனர்.
நீர்யானை தாக்குதல் குறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பராமரிப்பாளரை நீர்யானை தாக்கியதாகவும், அவர் காட்டாங்குளத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், தற்போது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: முரசொலி பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்து ஆபாச பதிவு.. சென்னை சைபர் கிரைம் விசாரணை!