சென்னை: ராயபுரம் சேக் மேஸ்திரி தெருவில் காவல் துறையினர் நேற்று (ஜுன்.30) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற நபரிடம் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அவர் காவல் துறையினர் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மீனாட்சி அம்மன் பேட்டை தொப்பை தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது (40) என்பதும், புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக சவுகார்பேட்டையிலிருந்து வாங்கி மோட்டார் சைக்கிளில் அவற்றைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து, அவரிடமிருந்த இரண்டு கிலோ புகையிலைப் பொருள்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சாகுல் ஹமீதை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ. 3 லட்சம் கொள்ளை