சென்னை: தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக பணி புரிவதற்கான தகுதித் தேர்வு (TNSET) குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் செட் (SET) தேர்வினை நடத்தவுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், “தமிழ்நாட்டில் 12 நகரங்களில் நடைபெறவிருக்கும் இத்தேர்வுக்கு, வரும் ஜூன் 7ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை www.tnsetau.in என்கிற இணைய முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 26 பாடங்களுக்கு செட் (SET) தேர்வுகள் நடத்தப்படும். வழக்கமாக ஓ.எம்.ஆர்.(OMR) தாளில் விடைகளை குறிப்பது போன்று தேர்வு நடைபெறும். கரோனா தொற்று பரவல் குறையாதபட்சத்தில் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும்.
பொதுப்பிரிவினருக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.1,500, பிற்படுத்தப்பட்டோருக்கான கட்டணம் ரூ.1,250, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ.500ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை, பிற்பகல் என இரண்டு தாள்கள் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். முதல் தாள் 100 மதிப்பெண்களுக்கும், இரண்டாம் தாள் 200 மதிப்பெண்களுக்கும் தேர்வு நடத்தப்படும்.
தேர்வு நடைபெறும் தேதி, முடிவுகள் வெளியிடப்படும் தேதி உள்ளிட்டவை பின்னர் இணையதளத்தின் மூலம் அறிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.