டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். குரூப் 4 தேர்வு முறைகேட்டைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு நடந்த குரூப் 2A தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாகவும், 42 பேர் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாகவும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் சிபிசிஐடி அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி காவல் துறையினர், முறைகேடு செய்து தேர்ச்சி பெற்ற 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகளான ஜெயக்குமார், காவலர் சித்தாண்டி உள்ளிட்டோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணியை சிபிசிஐடி காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் கைதான ஐந்து பேரை தவிர்த்து மீதமுள்ளவர்களில் 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களின் செல்போன் எண்கள் மூலம் யார் யாரை தொடர்பு கொண்டுள்ளனர்? அவர்களுக்கு வெளியில் இருந்து உதவி செய்பவர்கள் யார் என்பன உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக இன்று எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து தேர்வு எழுதியவர்கள் 10 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தனர். இதில், காஞ்சிபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் வடிவு (44) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சென்னை பட்டிணப்பாக்கம் பதிவுத் துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் ஞானசம்பந்தம் (30), செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் ஆனந்தன் (32). இவர்கள் மூவரும் தலைமறைவாக உள்ள ஜெயகுமார் என்பவரிடம் 15 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாகக் கொடுத்து முறைகேடு செய்து தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்தது.
மேலும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் முத்துகுமார் (35) தனது மனைவி தேர்வு எழுத சித்தாண்டியிடம் பணத்தை லஞ்சமாகக் கொடுத்துள்ளார். இதனால் காவலர் முத்துகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுப்பட்ட ஒன்பது பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். குரூப் 4 தேர்வில் 16 பேரை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரபல நட்சத்திர ஹோட்டலை போலியாக விற்க முயற்சி - மூவர் கைது