2019 செப்டம்பர் 1ஆம் தேதி குரூப்-4 தேர்வு மாநிலம் முழுவதும் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர், தட்டச்சு பணியாளர் உள்ளிட்ட ஒன்பதாயிரத்து 398 பணியிடங்களுக்கு 14 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதினார்கள்.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேஸ்வரம் பகுதிகளில் தேர்வு எழுதியவர்கள் அதிகளவில் தேர்வாகியிருந்ததோடு, தேர்வு எழுதிய 262 பேரில் 35-க்கும் மேற்பட்டோர் முதல் 100 இடங்களுக்குள் தேர்ச்சிபெற்றிருந்தனர். இந்தத் தேர்ச்சி தேர்வர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விசாரணையை மேற்கொண்டது.
இந்நிலையில், தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் நேற்று தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநரை சந்தித்து இது தொடர்பான விசாரணையை சிபிசிஐடி மேற்கொள்ள கோரிக்கைவிடுத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் உத்தரவின்பேரில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு இன்று விசாரணை தொடங்கியது.
இந்த விசாரணையில் கீழக்கரை வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா, ராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி ஆகியோரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்திவருகிறது. மேலும், இந்த விசாரணையானது தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களிடமும், அவர்களுக்கு உதவிய இடைத்தரகர்களிடமும் நடத்தப்படும் எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் தரவரிசைப்பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் வந்த 39 நபர்களில் சுமார் 12-க்கும் அதிகமானோர் ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் சிபிசிஐடி காவல் துறைக் கண்காணிப்பாளர் மல்லிகா, காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளார் சந்திரசேகர் உள்ளிட்ட ஐந்து அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எந்த ஒரு அரசுத் தேர்வும் எழுத முடியாத அளவிற்கு வாழ்நாள் தடைவிதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குரூப் - 4 தேர்வு முறைகேடு - டிஎன்பிஎஸ்சி அலுவலர்கள் விசாரணை தொடக்கம்