சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்படும் எனவும் போட்டித் தேர்வுகள் ஜூன் மாதம் நடத்தப்படும் என்றும் இந்த ஆண்டுக்கான தேர்வுக்கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு மொத்தம் 5,255 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.
பொதுத்துறைகளுக்கான பணியிடங்களிலும் சிலவற்றை நிரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியானதாக சமூகவலைத்தளத்தில் தகவல் பரவியது.
இது தொடர்பாக விளக்கம் அளித்த டிஎன்பிஎஸ்சி செயலர், குரூப் 4 குறித்த தவறான தகவல் சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது. டிஎன்பிஎஸ்சி அறிவிக்கை அனைத்தும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என விளக்கமும் கொடுத்தார். இந்தநிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 காலிப்பணியிடங்கள் விவரம், தேர்வு நடைபெறும் தேதி ஆகியவற்றை இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்கவுள்ளது. தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார்.
இதையும் படிங்க: பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா நிறைவு