சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள தகவலில், 'மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 2 பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் நீதிமன்ற வழக்கில் உள்ளன. குரூப் 2 பதவிகளில் நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத பதிவுகளில் 5446 பேர் நியமனம், முதன்மை தேர்வுகள் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள், நவம்பர் மாதம் எட்டாம் தேதி வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முதல்நிலைத் தேர்வுகள் 2023 பிப்ரவரி 25ஆம் தேதி நடத்தப்படும். ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் 830 நியமனம் செய்வதற்கு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் ஜனவரி மாதம் வெளியிடப்படும். குரூப் நான்கு பணிகளில் 7ஆயிரத்து 301 பேர் தேர்வு செய்வதற்காக கடந்த அக்டோபர் மாதம் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வின் முடிவுகள் வரும் 2023 பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். மேலும் இந்த தேர்வின் அடிப்படையில் கூடுதலாக 2ஆயிரத்து 450 பணியிடங்கள் உள்பட 9ஆயிரத்து 751 நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். சமூகநலம் மற்றும் மகளிர் உரிமையியல் துறையில் அடங்கிய உதவி இயக்குநர், பெண்கள் மட்டும் பதவிக்கான கணினி வழி தேர்வுகள், நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடத்தப்பட்டு, அதன் தேர்வு முடிவுகள் டிசம்பர் 29ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
வருவாய்த் துறையில் நில அளவையர் பணியில் 1089 பேர் தேர்வு செய்வதற்கான தேர்வுகள் டிசம்பர் மாதம் நடத்தப்பட்டன. இந்த தேர்வின் முடிவுகள் 2023 ஜனவரி மாதம் வெளியிடப்படும். குரூப் 1 தேர்வின் மூலம் துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக உள்ளாட்சித் துறையின் உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பதவிகளில் 92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மை தேர்வு நம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது.
இதன் முடிவுகள் பிப்ரவரி 2023ஆம் ஆண்டில் வெளியிடப்படும். வனத்துறை பணியாளர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் 2023 பிப்ரவரியில் வெளியிடப்படும். தலைமைச் செயலகத்தில் உதவி பிரிவு அலுவலர் பணிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் 2023 ஏப்ரல் மாதம் வெளியிடப்படும்.
தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை பிரிவில் தமிழ் மற்றும் ஆங்கில நிருபர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் 2023 பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். சிறை அலுவலர் ஆண் மற்றும் பெண் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும்’ என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஈரோட்டில் பிரபல தனியார் ஸ்கேன் மையத்திற்கு சீல்; உரிமம் இல்லாததால் நடவடிக்கை