சென்னை: உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 176 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இவர்களுக்கான முதனிலை எழுத்து தேர்வு 2019 நவம்பர் 24ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2020 மார்ச் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த முதன்மை எழுத்துத் தேர்வு கரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
அவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpscexams.net/ www.tnpscexams.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பிற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி அறிவிப்பு