தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான மு.சுப்பிரமணியன் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்ற வேலையில் தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து அச்சங்கத்தினர் சென்னை சைதாப்பேட்டையிலுள்ள பனகல் மாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மு. அன்பரசு, "தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் கோமாளிகளுடைய ஆட்சியில் லஞ்சத்துக்கு எதிராகச் செயல்பட்டு வேலை கலாசாரத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரை, இந்த அரசு நாங்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக வன்மத்தோடு அவரைப் பணியிடை நீக்கம் செய்து ஆணை பிறப்பித்துள்ளது.
லஞ்சம் வாங்கும் ஆட்சியாளர்கள் சுற்றித்திரிகின்ற போது லஞ்சத்துக்கு எதிராகக் குரல்கொடுத்த எங்கள் மாநிலத் தலைவரை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். உடனடியாக எடப்பாடி, ஓபிஎஸ், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும், இல்லையென்றால் 33 மாவட்டங்களிலும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என எச்சரிக்கை விடுத்தார்.