சென்னை: மாலை 6 மணி நிலவரப்படி மாண்டஸ் புயல், சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 170 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 14 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது எனவும், மாமல்லபுரத்தில் இருந்து 135 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே புயல் கரையை கடக்கும் போது பாதிப்புகளை தவிர்க்க மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்விநியோகம் நிறுத்தப்படும் எனவும், அதிகபட்சம் 2 மணி நேரம்தான் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் மின்வாரியம் அறிவித்துள்ளது. புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களில் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது ஏற்படும் மின்சாரம் தொடர்பான பாதிப்புகளை சரிசெய்ய ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்க உள்ளதால், கடற்கரைச் சாலைகளில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேகமாக கரையை நெருங்கும் மாண்டஸ் புயல் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!