தமிழ்நாடு மின்சார வாரியம் நிர்வாக சீர்திருத்தம் என்னும் பெயரில் பணியாளர்கள் குறைப்பு, தனியார் நிறுவன பராமரிப்பிற்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுவருகிறது. அவை மத்திய அரசின் மின்சாரத் திருத்தச் சட்டத்தை மறைமுகமாக அமல்படுத்துவதுபோல் உள்ளதாக மின்துறை பொறியாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடனுக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கியதுதான் காரணம் என்றும், அதில் காற்றாலை மின்சார கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட குளறுபடிதான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவில், காற்றாலை மின்சாரம் வாங்கியதால் 1 லட்சத்து 60 கோடி நஷ்டம் மின்சாரத் துறைக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகளில் இருந்து 8543 மெகாவாட் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் அதிகாரம் படைத்த இவர்களின் தில்லுமுல்லு பலவிதமாக நடைபெறுகிறது. உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அந்த நேரத்திலேயே பயன்படுத்தப்பட வேண்டும். மளிகைக்கடை பொருட்கள் போல் கையிருப்பு வைத்துக்கொள்ள முடியாது என்பதுதான் மின்சார அறிவியலின் அடிப்படை விதியாகும்.
ஆனால் வங்கிபோல் சேகரித்து ஒழுங்குமுறை ஆணையம் காற்றாலை மின்சாரத்தை மட்டும் சேகரித்து பின்னர் தர வேண்டும் என உத்தரவிடுகிறது. மழை மற்றும் கார்காலத்தில் கணக்கில் வைத்துக் கொண்டு கோடைக்காலத்தில் பயன்படுத்துவதுதான் பேங்கிங் எனப்படும் திட்டம்.
இதில் முக்கியமாக பேங்கிங் மற்றும் கணக்கீடு என்ற முறையில் முறைகேடுகள் அதிகரித்துள்ளன. அவற்றில் பேங்கிங் என்பதில் மின்சாரம் சேகரிக்கவே முடியாதது. இதனால் கடந்த 15 ஆண்டுகளில் பேங்கிங்கினால் 16 ஆயிரத்து 280 கோடி நஷ்டமும், 9 ஆண்டுகளில் மின் கணக்கீடுகளில் குளறுபடியால் 11 ஆயிரத்து 259 கோடி நஷ்டமும் என காற்றாலை மின்சாரத்தினால் மட்டும் 27ஆயிரத்து 539 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தனியார்மயமாகும் மின்துறை: ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்