சென்னை: தமிழ்நாட்டு அரசின் நீர்வளத் துறையில் முதன்மை பொறியாளராக இருப்பவர் முத்தையா. இவர் இன்று (நவ. 20) நுங்கம்பாக்கம் பகுதியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி உள்ளனர்.
தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை ஆன்லைன் முன்பதிவு மூலம் ஆற்று மணல் விற்பனை செய்து வருகிறது. இதில், மணல் வாங்கும் அனைவருக்கு அரசு சார்பில் இ-ரசீது வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மணல் விற்பனையில் முறைகேடு நடப்பதாகவும், உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் சட்டவிரோதமாக மணல் விற்கப்படுவதாகவும், இதனால் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்ததாகவும், அதன் அடிப்படையில் திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரிகளில் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "3 வருடமாக தமிழக ஆளுநர் என்ன செய்து கொண்டு இருந்தார்?" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!
ஆறுகளில் மணல் அள்ளுவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதால் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. மேலும், அதன் அடிப்படையிலும் ஒப்பந்ததாரர்களுக்குச் சொந்தமான இடங்கள் மணல் குவாரிகளிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அனைத்து இடங்களிலும், துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பின்னர், அரசு குறிப்பிட்ட அளவிற்கு மேலாக மணல்கள் அள்ளப்பட்டு முறைகேடு செய்யப்பட்டு இருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மேலும் இந்த முறைகேடுகள் அரசு அதிகாரிகளுக்குத் தெரியாமல் எவ்வாறு நடைபெற்றது என அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியது.
இதையடுத்து, சுமார் 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பி இருந்ததாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று (நவ.20) நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு நீர்வளத் துறையின் முதன்மை பொறியாளர் முத்தையா நேரில் ஆஜராகி உள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் உரிய விளக்கம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமன் அனுப்பப்பட்டுள்ள அதிகாரிகளும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.. மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!