சென்னை: தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட ஏதுவாக 16 ஆயிரத்து 540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகை நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், " தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1,2,3 ஆகிய நாள்களில் தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன் 3 ஆயிரத்து 506 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
மூன்று நாள்களும் சேர்த்து சென்னையிலிருந்து 9 ஆயிரத்து 806 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6 ஆயிரத்து 734 பேருந்துகள் என மொத்தமாக 16 ஆயிரத்து 540 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளிக்கு பின் 17,719 பேருந்துகள்
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் 5 முதல் 8 ஆம் தேதி வரையில் தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன் 4 ஆயிரத்து 319 சிறப்பு பேருந்துகளும், பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 5 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 17 ஆயிரத்து 719 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் ஆறு இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாதாவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே நகர் பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து இயக்கபட உள்ளன.
1500 ஆம்னி பேருந்துகள்
ஆம்னி பேருந்துகளைப் பொருத்தவரை 1,500 பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முன்பதிவு செய்வதற்கு ஏதுவாக 10 முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும்.
மேலும் பொதுமக்கள் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மற்ற பேருந்து நிலையங்களுக்கு செல்ல மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்பு பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொறியியல் முதலாண்டு வகுப்புகள் அக்.25இல் தொடங்கும்- அமைச்சர் பொன்முடி