சென்னை: பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பேருத்தில் படிக்கட்டுகளில் பயணம் மேற்கொள்வதை தவிர்த்து பாதுகாப்பான பேருந்து இயக்கம் செய்ய அறிவுறுத்துதல் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோயம்புத்தூர் மண்டலம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ”அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் படிக்கட்டுகளில் பள்ளிக் கல்லூரி மாணவர்கள், பயணிகள் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் மேற்கொள்வதால் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வந்த வண்ணம் உள்ளது. இதனை தவிர்க்க ஓட்டுநர், நடத்துனர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் மற்றும் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நிறுத்தி, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்றி பேருந்துக்குள் செல்ல போதிய இட வசதி ஏற்படுத்திக் கொடுத்து பயணிகள் படியில் நின்று பயணம் செய்யாதவாறு பணிபுரிய அறிவுறுத்தப்படுகிறது.
பயணிகள் கூட்டம் அதிகம் ஏற்படும் பொழுது கூடுதல் பேருந்துகள் இயக்க ஏதுவாக தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பான முறையில் ஏறி இறங்குவதை உறுதி செய்த பின்பு பேருந்துகளை இயக்க வேண்டும். தணிக்கையாளர்கள் வழித்தடங்களில் ஆய்வு மேற்கொள்ளும் போது படிக்கட்டு பயணத்தை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இது குறித்து புகார்கள், சம்பவங்கள் ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் நடத்துநர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : போதைப்பொருள் விற்றால் குண்டர் சட்டம்: டிஜிபி உத்தரவு