சென்னை கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட வடபழனி பகுதியில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற உணவுத்துறை அமைச்சர் காமராஜ், பின்னர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காய்ச்சல் தடுப்பு முகாமில் ஆய்வு செய்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ், “இந்தியாவில் கரோனா தடுப்புக்கு தமிழ்நாடுதான் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.
நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் சிகிச்சை பெற்று திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்தும், இறப்பு விகிதம் குறைந்தும் தமிழ்நாட்டில் உள்ளது.
மேலும், இந்திய அளவில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் தமிழ்நாடு முன்மாதிரியாக விளங்குகிறது. சென்னையில் இதுவரை 96 விழுக்காடு குடும்ப அட்டை தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மீதமிருக்கும் பலர் சொந்த ஊருக்கு சென்று இருக்கும் சூழலில் முதலமைச்சருடன் கலந்தாலோசித்து நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி கரோனா பேரிடரை கருத்தில் கொண்டு, குடும்ப அட்டை இல்லாத வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கும் இலவச ரேஷன் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...'தமிழி' எழுத்து வரலாற்றில் முக்கியத் திருப்புமுனை; 'மா' மதுரையில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொக்கிஷம்!