சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மராத்வாடா முதல் தென் தமிழ்நாடு கடலோரப் பகுதி வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று (ஏப்ரல் 25) முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை, மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருநெல்வேலி, தென்காசி, கன்னியகுமாரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, திருச்சிராப்பள்ளி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36, குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு இருப்பதால் பிற்பகல் முதல் காலை வரை உஷ்ணமாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு நிலவரப்படி, பொள்ளாச்சி (கோவை), சிவலோகம் (கன்னியாகுமாரி) பகுதியில் தலா 4 செ.மீ., ஏலகிரி (திருப்பத்தூர்), ஒசூர் (கிருஷ்ணகிரி), பெரியாறு (தேனி), அலியார் (கோவை) பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: வங்கி வேலை நேரம் குறைப்பு