தமிழ்நாட்டில் சமீப காலமாக அரங்கேறி வரும் சாதிய வன்கொடுமைகளை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், “கருவேப்பிலங்குறிச்சி திலகவதி படுகொலை காட்டுமிராண்டி தனத்தின் உச்சநிலை ஆகும். சாதி, மதம் என்பது உள்ளீடாக இந்த வன்கொடுமைகளுக்கு காரணமாக இருந்தாலும், ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான் இந்த படுகொலைக்கு காரணம்.
இந்த ஆணாதிக்க படுகொலைகள் அனைத்து சமுகத்திலும் அரங்கேறி வருகிறது. படுகொலைகளின் எண்ணிக்கையில் வேறுபாடு இருக்கலாம். இந்த கொலை குற்றங்களை விசாரிக்கும் தமிழக காவல்துறை அரசியல், சாதி சக்திகளுக்கு இணங்கி செயல்படுகின்றன்ர். எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் " என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நடிகர் கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது தமிழ்நாடு அரசியலின் திசையை வன்முறைக்கு இட்டுச் செல்வது போல் அமைந்துள்ளது. சங் பரிவார் அமைப்புகளில் ஒன்றாக அதிமுக மாறி வருகிறதோ என்ற அச்சம் எழுகிறது. இது போன்ற வன்முறை தடித்த வார்த்தைகள் வடமாநிலங்களில்தான் ஒலிக்கும். தற்போது தமிழகத்தில் அதுவும் உயர் பதவியிலிருக்கும் அமைச்சர் பேசியிருப்பது சரியில்லை.
கோட்சே எதற்காக காந்தியை கொலை செய்தார் என்பது அவர் வாக்குமூலத்தில் இருக்கிறது. எனவே உண்மையை கூறிய கமலை அச்சுறுத்துவது தமிழக அரசியலில் இருக்கும் நல்லிணக்க சூழலை சீர்குலைக்கும். அவருக்கு உரிய பாதுகாப்பை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.