சென்னை பிராட்வே பகுதியில் 12.50 லட்ச ரூபாய் செலவில் பொருத்தப்பட்டுள்ள 66 சிசிடிவி கேமராக்களை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "சென்னை மாநகராட்சியின் சார்பில் 2 கோடி ரூபாயும் அமைச்சர் தங்கமணி ஒரு கோடி ரூபாயும் சென்னை மாநகர காவல் துறையினருக்கு நிதியுதவி அளித்தனர். இந்த நிதிகள் ஒவ்வொரு மாவட்ட காவல் துறைக்கும் பிரித்து கொடுக்கப்பட்டு, சென்னை மாநகர காவல் துறை எல்லைக்கு உட்பட்ட பல பகுதிகளில் பொதுமக்கள், வணிகர்கள் உதவியுடன் காவல் துறையினர் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகின்றனர்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சென்னை வடக்கு மண்டல காவல் துறைக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட நிதியில் தான் இன்று இந்த 66 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. குற்றம் நடந்த உடன் விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் அடுத்த கட்ட நடவடிக்கையாக, அவர்களைக் கைது செய்வதற்கும் சிசிடிவி கேமராக்கள் முக்கியப் பங்கு வகிக்கும். சென்னை மாநகர மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் காவல் துறை தொடர்ந்து பாடுபடும்" என்றார்.
இதையும் படிங்க; மாநிலங்களவைத் தேர்தல் - திமுகவினர் வேட்புமனு தாக்கல்