சென்னை: தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில், கருக்கா வினோத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழகக் காவல்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய மாம்பலம் காவல் நிலையத்தினர் கருக்கா வினோத்தைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 19ம் தேதி கருக்கா வினோத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஜாமீனில் வெளிவந்த கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை நுழைவுவாயிலில் பெட்ரோல் குண்டு வீசிய நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தினமும் நீதிமன்றத்தில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையை நிறைவேற்றவில்லை என்றும், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவத்தில் கிண்டி காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதாகி, நீதிமன்ற காவலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்திற்கும், பொது மக்களுக்கும் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் செயலில் கருக்கா வினோத் ஈடுபட்டுள்ளதாலும், இவரால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு, சென்னை மாநகரில் பல பதட்டமான சூழ்நிலையை உருவாகி உள்ளதாலும், கருக்கா வினோத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, நிபந்தனை ஜாமீனிலிருந்து வெளியே வந்த பிறகும், தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் கருக்கா வினோத் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, வழக்கு தொடர்பாகக் கருக்கா வினோத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதே நிலையில், ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் கருக்கா வினோத் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "ராகுல் செய்வதை, ஸ்டாலின் செய்ய முடியாதா?" ஈடிவி பாரத் பேட்டியை சுட்டிக்காட்டி ராமதாஸ் அறிக்கை...