சென்னை : தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனம், மாநிலத்தில் தொழில் முதலீடுகளை ஈர்த்து, நிறுவனங்கள் தொழில் தொடங்க உதவி செய்து வருகிறது. இந்நிறுவனம், உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்குவது, அவைகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவது உள்ளிட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அதிநவீன தொழில்நுட்ப ரீதியிலான தயாரிப்புகளையும், அதிக மதிப்புள்ள உற்பத்திகளையும் வளர்க்கும் வகையில், தெற்காசியாவிலேயே முதல்முறையாக மேம்பட்ட உற்பத்தி மையத்தை (Advanced Manufacturing HUB - AMHUB) ஏற்படுத்த உலகப் பொருளாதார மன்றத்துடன் இந்நிறுவனம் இணைந்துள்ளது.
தானியங்கித் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்பியுட்டிங், பொருள்கள் இணையம் எனப்படும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் மூலமாக நவீனமயமானப் பொருள்களை உற்பத்தி செய்வதில் உள்ள வாய்ப்புகளைக் கண்டறிந்து இங்குள்ள நிறுவனங்கள் பயன்படுத்த இந்த ஒப்பந்தம் உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக, தமிழ்நாட்டில் மின்னணு சாதனங்கள், மின்சார வாகனங்கள், சூரிய மின் உற்பத்தித் தகடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.
மேலும், அதிநவீன தொழில்நுட்ப ரீதியிலான தயாரிப்புகளை மேம்படுத்தவும், தமிழ்நாட்டில், இந்தியாவில் முதல்முறையாக என்று இல்லாமல், ஆசியாவிலேயே முதல்முறையாக இதுபோன்ற ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தொழில் வழிகாட்டி நிறுவன தலைமைச் செயல் அலுவலரும் மேலாண் இயக்குநருமான நீரஜ் மிட்டல் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.