சென்னை: தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சர்வே எண் அடிப்படையில் நிலத்தின் மதிப்பு மாறுபடும். எனவே கையகப்படுத்தும் நிலத்திற்கான சந்தை விலையைவிட 3 அரை மடங்கு இழப்பீடு அதிகமாக வழங்கப்படும் என்றார்.
மேலும் 13 கிராமத்தில், 1005 வீடுகளை அப்புறப்படுத்த உள்ளோம். கையகப்படுத்தும் நிலத்திற்கு பணமும், வீடு கட்டுவதற்கு நிலமும், பணமும் வழங்க உள்ளோம் என தெரிவித்த அவர் விமான நிலையம் அமைக்கப்படும் இடத்திற்கு அருகாமையில், விரும்பக்கூடிய இடத்தில் வசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கூறினார்.
அப்பகுதியில் வசிப்பவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும். விவசாயிகள் எந்தவிதத்திலும் பாதிக்க கூடாது என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். ஆனால், இதுபோன்ற பொது நோக்கத்திற்கான திட்டங்கள் வரும்போது விவசாய நிலத்தை எடுப்பதை தவிர வேற வழி இல்லை. பெங்களூர், ஹைதராபாத் வளர்ச்சி நம்மை விட கூடுதலாக உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது நமக்கு புதிய விமான நிலையம் அவசியமாக உள்ளது.
பன்னூர், பரந்தூர் ஆகிய இடங்களில் ஒப்பிட்டு பார்க்கும் போது, பரந்தூரில் குறைந்த வீடுகள் தான் உள்ளது. அதனால் தான் பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்படும் மக்களும் குறைவு. தமிழ்நாட்டில் பொருளாதாரம், அந்நிய செலாவணி ஈட்டுவதற்காக ஸ்டாலின், புதிய விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளார்.
விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள 13 கிராமங்களில், நன்செய் 2446.79 ஏக்கரும் புன்செய் நிலத்தை பொறுத்தவரையில் 799.59 ஏக்கரும் 1317.18 ஏக்கர் அரசு புறம்போக்கு உள்ளது. 4563.56 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளோம். 3246 ஏக்கர் பட்டா நிலம் உள்ளது. புதிதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்தில் நீர் நிலைகள் பாதிக்காத வகையில், சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டது போல் ஓடுதளம் அமைக்கப்படும்.
8 வழிச்சாலை பணிகளின் போது, விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்துங்கள்
என்று தான் சொன்னோம் என அவர் கூறினார். தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு... 5 பேருக்கும் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு