தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு மே 24ஆம் தேதிமுதல் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இன்றுடன் முடிவடைவிருந்த ஊரடங்கு உத்தரவை, சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
நோய்ப் பரவல் அதிகமாகவுள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் அத்தியாவசிய பணிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களுக்கு, அரசுத் தரப்பில் அறிவித்த ஊரடங்குத் தளர்வுகளின் பட்டியல் இதோ...
- மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- தனியார் சேவை நிறுவனங்கள், அலுவலகம், வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.
- தனியார் பாதுகாப்புச் சேவை நிறுவனங்கள், அலுவலகம், வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் அனுமதிக்கப்படும்.
- மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி, இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
- வாகனங்களின் உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், புத்தகங்கள் விற்கும் ஸ்டேசனரி கடைகள், ஹார்டுவேர் கடைகள், இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடைகள், மின்பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படும்.
- அனைத்து அரசு அலுவலகங்களும், 30 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 விழுக்காடு டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்
- வாடகை வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும்.மேலும் வாடகை டாக்சிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகளும் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்
- ஜுன் 14ஆம் தேதிவரை பேருந்து போக்குவரத்துக்குத் தடை நீடிக்கும்
- டாஸ்மாக், சலூன், தேநீர்க் கடைகளைத் திறக்க அனுமதியில்லை