மதுரையைச் சேர்ந்த அருண் என்பவரின் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் நீலமேகம் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"தமிழ்நாடு அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. இந்தச் சேனல் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
கல்வி தொலைக்காட்சியின் ஒருங்கிணைப்பாளராக அமலன் ஜெரோம் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2017- 2018 கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, பல திட்டத்தை அரசு அறிமுகம் செய்தது.
இத்திட்டத்தின்படி இசை, போன் யுக்திகளை பயன்படுத்தி தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணர்களின் கற்றல் திறனை அதிகரிப்பதற்கான சிடி தயாரிப்பு பணி அமலன் ஜெரோமின் மனைவி நடத்திவரும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்நிறுவனம் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு பல கோடி ரூபாய் சம்பாதித்தது.
இது தொடர்பாக அமலன் ஜெரோம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இத்திட்டத்தை நிறைவேற்ற ஊழல் வழக்கை சந்தித்துவரும் அமலன் ஜெரோமை கல்வி தொலைக்காட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக நியமித்திருப்பது சட்டவிரோதம். எனவே ஊழல் வழக்கு அடிப்படையில் அமலன் ஜெரோமை பணி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ஊழல் விவகாரம் காரணமாக தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சி பொறுப்பிலிருந்து அமலன் ஜெரோம் நீக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால், வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க...ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தொடரும் மாணவர்கள் போராட்டம்!