நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாகனப் பயன்பாடு காரணமாக காற்று மாசு அதிகரித்துள்ளது. இது ஒருபுறமிருக்க மரங்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைவதால், காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு வாயுவின் அளவும் அதிகரித்துள்ளது. மனித இனத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்தச் சிக்கலைத் தீர்க்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
அந்த வகையில், இயற்கையான முறையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வேலையில் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை களமிறங்கியுள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை காலம் என்பதால் கிறிஸ்துமஸ் பொம்மைகள், செயற்கையான கிறிஸ்துமஸ் மரங்கள் உருவாக்குவது வழக்கம். இவற்றை இயற்கையான முறையில் உருவாக்கும் முயற்சியில் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை களமிறங்கியுள்ளது. இதற்காக உண்மையான கிறிஸ்துமஸ் மரங்களை வளர்த்து அதன் விற்பனையும் நடைபெற்றுவருகிறது.
அதிக அளவில் ஆக்சிஜனை வெளியிடும் இந்த கிறிஸ்துமஸ் மரங்கள் காற்று மாசுவை தடுக்க உதவுகிறது. சென்னை மாதவரம் தோட்டக்கலை பண்ணை பூங்கா, செம்மொழி பூங்காவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த மரங்களின் மூலம் பண்டிகைகள் கொண்டாடப்படுவதோடு மட்டுமல்லாமல் இயற்கையையும் பாதுகாக்க முடியும் என்கிறார் செம்மொழி பூங்கா தோட்டக்கலை அலுவலர் தினேஷ்.
இந்த கிறிஸ்துமஸ் மரங்கள் ஒவ்வொன்றும் தலா 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முதல்கட்டமாக 1500 செடிகள் மட்டும் அண்ணா நகர், திருவான்மியூர், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இவற்றின் விற்பனை அதிகரித்தால் மேலும் பல இடங்களிலும் விற்பனை செய்ய தயாராக உள்ளனர் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையினர். இயற்கை பொருள்களைக் கொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தமிழ்நாடு தோட்டக்கலையின் முயற்சிகள் பாராட்டுதலுக்கு உரியது.
இதையும் படிங்க...SBI நகை மதிப்பீட்டாளருக்கான தொகை நிர்ணய அறிவிப்பிற்கு தடை!